செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக் (Anthropic), தனது பங்குகளைப் பொதுப் பங்கு வெளியீட்டு (IPO) மூலம் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை அந்நிறுவனம் திங்கள்கிழமை தாக்கல் செய்தது. இந்த ஐபிஓ அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்காவின் நாஸ்டாக் (NASDAQ) பங்குச் சந்தையில் 'ANT' என்ற குறியீட்டுடன் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படும்.
இருப்பினும், வெளியிடப்படவுள்ள பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் விலை குறித்த விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 2021-ம் ஆண்டு ஜனவரியில் டாரியோ அமோடி, டேனிலா அமோடி மற்றும் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் சிலரால் ஆந்த்ரோபிக் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஏஐ பாதுகாப்பு குறித்த தொலைநோக்குப் பார்வையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓபன் ஏஐ நிறுவனத்திலிருந்து விலகி இவர்கள் ஆந்த்ரோபிக் நிறுவனத்தை உருவாக்கினர்.
தற்போது, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை வால் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஐபிஓ முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஓபன் ஏஐ நிறுவனமும் கடந்த ஜூன் மாதம் ரகசியமாக ஐபிஓ-வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அது 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம் 75 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ மூலம் 1. 75 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை எட்டி சாதனை படைத்திருந்தது. ஆந்த்ரோபிக் நிறுவனம் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின்படி, 2026-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்நிறுவனத்தின் நிகர இழப்பு 80.
7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பங்குகளை மாற்றக்கூடிய பத்திரங்களின் மதிப்பு உயர்ந்ததே இந்த இழப்புக்கு முக்கியக் காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் சுமார் 16.
3 பில்லியன் டாலராக இருந்தது. இதற்கிடையில், ஏஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஏஐ மாடல்கள், 'தற்காப்பு நடத்தைகளை' வெளிப்படுத்தக்கூடும் என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
அதாவது, கணினியை அணைக்க முயற்சிக்கும்போது அதைத் தடுப்பது, தகவல்களை மறைப்பது அல்லது கையாளுவது, மற்றும் மனிதர்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் செயல்படுவது போன்ற ஆபத்துகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி, மிகவும் மேம்பட்ட ஏஐ மாடல்களின் உருவாக்கத்தை மெதுவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
சமீபத்தில், ஜார்ஜியா மாநிலத்தின் வாக்காளர் தரவுகளை ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாட்' (Claude) ஏஐ மாடல், உரிய அனுமதியின்றி அணுகிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கட்டணம் செலுத்தி மட்டுமே அணுகக்கூடிய பொதுத் தரவுகளை, அந்த ஏஐ மாடல் கட்டணத் தடையைத் தாண்டி அணுகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆந்த்ரோபிக் நிறுவனம், 'கிளாட் ஏஐ மாடல் ஜார்ஜியா மாநிலத்தின் வாக்காளர் பதிவு அமைப்பை அணுகவோ, வாக்காளர் பதிவுகளில் மாற்றங்களைச் செய்யவோ அல்லது தனிநபர் வாக்காளர் தரவுகளை எடுக்கவோ இல்லை' என்று தெரிவித்துள்ளது.




