ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் இரண்டு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மாட்ரிட்-செவில்லி வழித்தடத்தில் சென்ற ஏவிஇ (AVE) மற்றும் ஐரியோ (Iryo) ரயில்கள் மோதிக்கொண்டதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு சரிவில் விழுந்தன. இந்த விபத்து காரணமாக மாட்ரிட் முதல் சியுடாட் ரியல் மற்றும் அண்டலூசியா வரையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'இந்த தீவிரமான ரயில் விபத்து மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவசரக்கால மீட்புக் குழுவினர் களத்தில் பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்கான முதற்கட்டக் காரணத்தை அரசு அதிகாரிகள் விளக்கியுள்ளனர். இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், 'முக்கிய சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ரயில் இயக்கம் கைமுறை கட்டுப்பாட்டிற்கு (manual mode) மாற்றப்பட்டது. அப்போது அடிக் (Adif) ரயில்வே ஆபரேட்டரின் மனிதத் தவறே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம்' என்று தெரிவித்துள்ளன.
விபத்து நடந்தபோது, ரயில்களில் ஒன்றான ஐரியோ ரயிலில் 146 பயணிகள் மற்றும் ஒரு குழந்தையும், ஏவிஇ ரயிலில் 397 பயணிகளும் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த டோலிடோ மாகாணத்தின் பிராந்திய அரசு செய்தித் தொடர்பாளர் எஸ்தர் படில்லா, விபத்து நடந்ததை உறுதிப்படுத்தினார். ரயில்களில் ஒன்று தண்டவாளத்தில் ஏன் நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
விபத்து நடந்த இடத்தில் சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே ரயில்கள் கைமுறை கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டதாக நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். 1980-களில் நிறுவப்பட்ட எல்இசட்பி (LZB) சிக்னல் அமைப்பு தற்போது காலாவதியான நிலையில், அதை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் ரயில்வே உள்கட்டமைப்பு நிறுவனமான அடிக், விபத்து நடந்த வழித்தடங்களில் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.



