தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒருவர் முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய அவர், லயோலா மணி என்பவர் தன்னிடம் இக்கோரிக்கையை முன்வைத்ததாகவும், ஆனால் பணம் பெற்றுக்கொண்டு பதவி வழங்க மாட்டேன் என மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து அதிமுக எம்பி இன்பதுரை எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் யார் என்பதை அமைச்சர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்த நபரின் அடையாளத்தை மறைப்பது குற்றம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சரின் பொறுப்பை உணர்ந்து, ஆதாரங்களுடன் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என இன்பதுரை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

