வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த 'முரசு' புயல், இன்று அதிகாலை தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு-மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி. மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று காலை 8. 30 மணி நிலவரப்படி, இந்த புயல் சென்னையின் வடகிழக்கே 180 கி. மீ தொலைவிலும், நெல்லூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 180 கி.
மீ தொலைவிலும், ஓங்கோலுக்கு தென்கிழக்கே 210 கி. மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தெற்கே 240 கி. மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று நள்ளிரவு 11. 30 மணி முதல் நாளை (நவம்பர் 3) அதிகாலை 4 மணிக்குள் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 120 கி. மீ வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலங்கானாவின் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாதவரத்தில் 11 செ. மீ மழையும், எண்ணூர் மற்றும் நுங்கம்பாக்கத்தில் தலா 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை முன்கூட்டியே தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


