அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் எஞ்சிய இரண்டு ஆண்டுகால ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய இடைக்காலத் தேர்தல் அமெரிக்காவில் தொடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் குடியரசுக் கட்சியினரே தக்கவைப்பார்களா அல்லது ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றுவார்களா என்பதை இந்தத் தேர்தல் முடிவு செய்யும்.
வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் ஈரான் உடனான போர் குறித்த கவலைகளுக்கு மத்தியில், அதிபர் டிரம்ப்பின் கொள்கைகள் மீதான மக்களின் தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள், 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான அரசியல் களத்தையும், இரு கட்சிகளின் எதிர்காலப் போக்கையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும்.
நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் தற்போதைய குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையை முறியடிக்க, ஜனநாயகக் கட்சியினர் தலா நான்கு இடங்களை கூடுதலாகப் பெற வேண்டியுள்ளது. பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டாலும், செனட் சபைக்கான போட்டி கடும் இழுபறியாகவே உள்ளது. ஒருவேளை ஜனநாயகக் கட்சியினர் ஏதேனும் ஒரு அவையைக் கைப்பற்றினால், டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள், குடியேற்ற விவகாரங்கள் மற்றும் ஈரான் போர் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வழிவகுக்கும்.
இதற்கிடையில், தேர்தல் நேர்மையை உறுதிப்படுத்த அமெரிக்க நீதித்துறை (DOJ) வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிகப்பெரிய கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 50 மாநிலங்களிலும் சுமார் 1,000 தேர்தல் கண்காணிப்பாளர்களை நீதித்துறை களமிறக்கியுள்ளது. குறிப்பாக, கடும் போட்டி நிலவும் 126 மாவட்டங்களில் இவர்கள் தீவிரமாகக் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
வாக்காளர் அச்சுறுத்தல், இனம், நிறம், மதம் அல்லது தேசிய இனம் சார்ந்த பாகுபாடுகளைத் தடுப்பது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மொழி உதவி தேவைப்படும் வாக்காளர்களுக்கு உரிய வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவையே இவர்களின் முக்கியப் பணியாகும். இது குறித்து நீதித்துறையின் சிவில் உரிமைகள் பிரிவின் உதவி அட்டர்னி ஜெனரல் ஹர்மீத் கே.
தில்லான் கூறுகையில், "நாங்கள் நீதித்துறை வரலாற்றிலேயே மிகப்பெரிய கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். தேர்தலின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த உறுதியான மற்றும் பாகுபாடற்ற முறையில் செயல்படுகிறோம்" என்று தெரிவித்தார். இருப்பினும், இந்தக் கண்காணிப்பாளர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்ல என்றும், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவோ அல்லது வாக்கு இயந்திரங்களை அணுகவோ அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்றும், வாக்கு எண்ணிக்கை மற்றும் வாக்காளர் தகுதி தொடர்பான சர்ச்சைகள் எழக்கூடும் என்றும் தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, 2020-ம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் காட்டிய எதிர்வினைகள் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்த அவரது சர்ச்சைக்குரிய கருத்துகள் இப்போதும் விவாதப் பொருளாக உள்ளன.
வாக்காளர்களின் வருகை, குறிப்பாக இளைஞர்கள், கறுப்பினத்தவர்கள் மற்றும் ஹிஸ்பானிக் சமூகத்தினரின் வாக்குகள் இந்தத் தேர்தலில் தீர்க்கமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

