இந்தியாவில் விசா விண்ணப்ப நடைமுறைகளை உலகளாவிய தரத்திற்கு ஏற்ப எளிமைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மாற்றங்கள் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளன. இதன்படி, அனைத்து 22 வகை விசாக்களிலும் கேட்கப்படும் விவரங்களின் எண்ணிக்கை சுமார் 70 சதவீதம் குறைக்கப்பட உள்ளது. தேவையற்ற தகவல்களை நீக்கி, விண்ணப்பப் படிவங்களை எளிதாகப் பூர்த்தி செய்யும் வகையில் மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விண்ணப்பப் படிவங்களில் உள்ள 'மாவட்டம்' போன்ற தேவையற்ற விவரங்கள் நீக்கப்படவுள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகள் தங்களின் உள்ளூர் முகவரிக்கு பதிலாக, தங்கியிருக்கும் ஹோட்டல் விவரங்களை மட்டும் அளிக்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட உள்ளன. இ-விசா வசதி பெற்றுள்ள 147 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்த நடைமுறையை எளிதாக்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை விட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக உள்ளதால், இந்த மாற்றங்களைச் செய்யுமாறு சுற்றுலாத் துறை வலியுறுத்தி வந்தது. மேலும், விசா விண்ணப்பப் படிவங்களை ஸ்பானிஷ், ஜெர்மன் மற்றும் இத்தாலியன் போன்ற மொழிகளில் வழங்கவும், கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கான அனுமதி மற்றும் விண்ணப்ப கால அவகாசத்தை மேம்படுத்தவும் தொழில் துறை பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



