கேரள அரசு குறைந்த விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் நிலையில், தமிழக அரசு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கேரளாவில் ஒரு யூனிட் மின்சாரம் 12.50 முதல் 14.50 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதே சர்ச்சையாகியுள்ள நிலையில், தமிழகத்தில் 35 ரூபாய் முதல் 41.50 ரூபாய் வரை மின்சாரம் வாங்கப்படுவது குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்று ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு மின்சாரம் வழங்க முன்வந்தும், அதை கேரள அரசு புறக்கணித்த விவகாரத்தில் கேரள மின்வாரியத் தலைவர் நீக்கப்பட்டதை ஸ்டாலின் மேற்கோள் காட்டியுள்ளார். இத்தகைய குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளபோது, தமிழக அரசுக்கு அது ஏன் சாத்தியப்படவில்லை என அவர் வினவியுள்ளார்.
இந்த மின்சார கொள்முதல் விவகாரத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


