இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஆட்சி அமைப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அதிபர் ஐசாக் ஹெர்ஸாக் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தீவிர வலதுசாரி கூட்டணி 53 இடங்களையும், காடி ஐசன்கோட் மற்றும் நப்தாலி பென்னட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களையும், அரபுக் கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றின.
மொத்தம் 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், ஆட்சி அமைக்கத் தேவையான குறைந்தபட்ச பெரும்பான்மை 61 இடங்களாகும். தேர்தல் முடிவுகளின்படி எந்தக் கூட்டணியும் இந்த இலக்கை எட்டவில்லை. இருப்பினும், ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி காடி ஐசன்கோட்டுக்கு 67 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் கட்சிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாக அதிபர் ஐசாக் ஹெர்ஸாக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஆலோசனையில் நடந்தது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் யாருக்கு அரசாங்கம் அமைக்கும் திறன் உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சட்டப்படி என்னிடம் உள்ளது.
அரசியல் கூட்டணிகளுக்கு இடையில் நிலவும் விருப்பு வெறுப்புகளைப் பார்க்கும் போது இந்த விவகாரம் அவ்வளவு தெளிவாக இல்லை. சில அரசியல் கட்சித் தலைவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியே அதைத் தீர்மானிப்பேன்” என்று குறிப்பிட்டார். வழக்கமாக, அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும்.
இருப்பினும், சில சூழல்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்த கட்சிக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம். இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுபவருக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்; தேவைப்பட்டால் கூடுதலாக 14 நாட்கள் நீட்டிக்கப்படலாம். ஒருவேளை அந்தக் கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், வாய்ப்பு மற்றொரு கட்சிக்கு மாற்றப்படும்.
அந்த முயற்சியும் தோல்வியடைந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் ஒருவரைப் பரிந்துரைத்தால், அவர் தலைமையில் ஆட்சி அமைக்க அவகாசம் அளிக்கப்படும். இந்த வழிமுறைகள் அனைத்தும் தோல்வியடையும் பட்சத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


