ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால் ஆகிய இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய அந்த நபர், 7 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டல் குறித்து திலக் நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜர்னைல் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த நபர் தனக்கு தொலைபேசி அழைப்பு மற்றும் வாட்ஸ்அப் செய்தி மூலம் மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மொகாலியில் நவம்பர் 6-ம் தேதி அளிக்கப்பட்ட புகாரில், கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மிரட்டல் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் மொகாலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மிரட்டல் விடுக்கப்பட்ட அலைபேசி எண்ணின் அழைப்புப் பதிவுகள், இணைய நெறிமுறை பதிவுகள் மற்றும் இருப்பிடத் தரவுகளைக் கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



