மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், பிரேதப் பரிசோதனை அறிக்கை புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்ட நிலையில், அவரது உடலில் ஐந்து இடங்களில் காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அழகர்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதான பாலகிருஷ்ணன், தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த நவம்பர் 3-ம் தேதி, தேவாரத்திலிருந்து ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கிச் சென்றபோது, உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் பகுதியில் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தில் ஏலக்காய் மூட்டைகள் சேதமடைந்தன. இது தொடர்பாக வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர், சில ஏலக்காய் மூட்டைகள் காணாமல் போனதாகவும், காப்பீட்டு மோசடி நடந்திருக்கலாம் என்றும் நிறுவனத் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, விசாரணைக்காக பாலகிருஷ்ணன் கடந்த நவம்பர் 13-ம் தேதி இரவு செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவல் ஆய்வாளர் அறையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நவம்பர் 14-ம் தேதி அதிகாலை சுமார் 6 மணியளவில் கழிவறைக்குச் சென்ற பாலகிருஷ்ணன், அங்கு தூக்கிட்ட நிலையில் மயங்கிக் கிடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
உடனடியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காவல்துறை இதனைத் தற்கொலை என்று கூறியதை, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் முற்றிலுமாக மறுத்தனர்.
காவலர்கள் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாகவும், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், அவரது உடலில் காயங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர் பழனிவேல் ராஜன் மற்றும் பெண் காவலர் கலைச்செல்வி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. நீதித்துறை நடுவர் ஆனந்தராஜா முன்னிலையில், வீடியோ பதிவுகளுடன் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. முன்னதாக, காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை, அதில் பாலகிருஷ்ணன் கழிவறைக்குச் செல்வது பதிவாகியிருப்பதாகத் தெரிவித்திருந்தது.
தற்போது வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் ஐந்து இடங்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்கொலை என்று கூறப்படும் நிலையில், உடலில் காயங்கள் இருப்பது இந்த வழக்கில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.




