மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, பாலகிருஷ்ணன் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுதான் உயிரிழந்தார் என்பதில் சந்தேகமில்லை என்றும், சட்டப்படி காவல்துறையினர் எதையும் பின்பற்றவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர்கள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை, சம்பவத்தன்று காவல் நிலையத்தில் இருந்த அனைவரும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. முறையாகக் கைது செய்யப்படாத நிலையில், அவர் எப்படி இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்றும், சட்டவிரோதக் காவலில் அவர் வைக்கப்பட்டிருந்தது உறுதி என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். தவறு செய்திருந்தாலும், அதைக் காரணமாகக் கொண்டு காவல்துறையினர் சித்ரவதை செய்ததை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனர்.
உயிரிழந்த பாலகிருஷ்ணனின் மனைவி சுதாவைத் தானாக முன்வந்து இந்த வழக்கில் சேர்த்துக் கொண்ட நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

