2022-ம் ஆண்டு முதல் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் குறைந்தது 4,90,334 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் அரசு புள்ளிவிவர அமைப்பான ரோஸ்டாட் (Rosstat) தரவுகள் தெரிவிக்கின்றன. சைபர் பார்டிசன்ஸ் மற்றும் சைலண்ட் குரோ ஆகிய குழுக்களின் சைபர் தாக்குதலுக்குப் பிறகு கசிந்த இந்தத் தகவல்களை, பிபிசி ரஷ்யன் மற்றும் மீடியாசோனா இணைந்து ஆய்வு செய்துள்ளன. ரஷ்யா தனது அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை இதுவரை வெளியிடாத நிலையில், கசிந்த இந்த ஆவணங்கள், பொதுவெளியில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனக் கணக்கெடுப்புகளுடன் ஒத்துப்போகின்றன.
இந்த மோதல் ரஷ்யாவின் மக்கள் தொகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2025-ம் ஆண்டில் உயிரிழந்த 18 முதல் 24 வயதுக்குட்பட்ட ரஷ்ய ஆண்களில் 65 சதவீதம் பேர் இந்தப் போரிலேயே உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ அல்லது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களை விட, துவா மற்றும் புரியாத்தியா போன்ற ஏழ்மையான பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் போரில் உயிரிழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. மேலும், ரஷ்ய படைகளுக்காகப் போரிட்ட குறைந்தது 5,017 வெளிநாட்டினரும் உயிரிழந்துள்ளதாகத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
கசிந்த ஆவணங்களில் போர்க்களத்தில் நிகழ்ந்த அனைத்து உயிரிழப்புகளும் இடம்பெறாமல் இருக்கலாம் என்பதால், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை 5,27,295 முதல் 6,44,471 வரை இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். சுமார் பத்து ஆண்டுகள் நீடித்த சோவியத்-ஆப்கானிஸ்தான் போரில் சுமார் 15,000 வீரர்கள் மட்டுமே உயிரிழந்த நிலையில், ஐந்தாவது ஆண்டை நெருங்கும் உக்ரைன் போர் ரஷ்ய மக்கள் மீது பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது.






