இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு சர்வதேச அளவில் முன்மாதிரியாக உருவெடுத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மதுரையில் யங் இந்தியன்ஸ் அமைப்பு நடத்திய இருநாள் தேசிய நிதித் தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் அவர் பேசினார். ‘எல்லைகளைத் தாண்டிய தொழில்முனைவு’ என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டுக்கு யங் இந்தியன்ஸ் தேசியத் தலைவர் அருண் ரத்தோட் தலைமை வகித்தார்.
யூபிஐ தளத்தில் மாதந்தோறும் 20 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என்றும், நாட்டில் தற்போது 2,100 உலகளாவிய திறன் மையங்கள் செயல்படுகின்றன என்றும் சீதாராமன் கூறினார். ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-இரான் பதற்றம் மற்றும் விநியோகச் சங்கிலி, பொருளாதாரச் சவால்களுக்கு இடையிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர் விளக்கினார்.
பாரம்பரிய நெல் ரகங்களை உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விருதுநகரின் மிளகாய் வத்தல் வணிகத்தை உலகச் சந்தைக்கு கொண்டு செல்லும் நிறுவனத்தை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 71 கிளைகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட யங் இந்தியன்ஸ் உறுப்பினர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் மாநாட்டில் பங்கேற்றதாக அமைப்பு தெரிவித்தது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




