நேப்பியர் பாலம் முதல் மதுரவாயல் வரையிலான கூவம் நதியைச் சீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை நான்கு மாதங்களுக்குள் தயார் செய்ய நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி, கோயம்பேடு பகுதியில் நதியைச் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கி வைத்த அமைச்சர் என்.ஆனந்த், நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கரைகளைச் சீரமைத்தல் மற்றும் கழிவுநீர் கலப்பதைத் தடுத்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். கோயம்பேடு சந்தைப் பகுதியில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க, புதிய வடிகால் பாதைகளை அமைக்கும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி சுமார் 72 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கும் கூவம் நதியைச் சீரமைக்க கடந்த இருபது ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. முன்னதாக, சத்தியவாணி முத்து நகர் பகுதியில் இருந்த சுமார் 2,000 வீடுகள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும், நதிக்கரையில் இன்னும் சில ஆக்கிரமிப்புகள் நீடிப்பதால், அவற்றை அகற்றும் பணிகளும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ளன.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


