வடகிழக்கு ஜப்பானின் தெற்கு இபராகி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 70 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த இயற்கை பேரிடரில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; இவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
டோக்கியோ மற்றும் நரிட்டா விமான நிலையங்களுக்கான விரைவு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு தாமதமாக இயங்கின. இருப்பினும், ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் வழக்கம் போல் இயங்கின. அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.





