டெல்லியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் பயணிகள் தங்கள் உடைமைகளுடன் தண்ணீரில் நடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. விமான நிலையத்திற்குள் செல்வதிலும், வெளியேறுவதிலும் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. பயணிகள் தங்கள் விமானங்களின் நேரத்தை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளுமாறும், விமான நிலையத்திற்கு கூடுதல் நேரத்துடன் வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை, இடி மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாலை நேரத்திலும் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் நீர் தேக்கம் தொடர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





