கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி புக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அதன் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் ஒரே நேரத்தில் அழுத்தம் குறைந்தது. இதனால் விமானத்தின் தானியங்கி இயக்கம் துண்டிக்கப்பட்டு, விமானம் திடீரென நிலைதடுமாறியதில் அதில் பயணித்த 24 பேர் காயமடைந்தனர். இருப்பினும், விமானக் குழுவினர் திறமையாகச் செயல்பட்டு சுமார் 90 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்தை டெல்லியில் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.
விமான விபத்து விசாரணைப் பணியகம் நடத்திய ஆய்வில், விமானத்தின் கேப்டன் போதைப்பொருள் பரிசோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (DGCA) உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், துணை விமானிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியானது.
விமானத்தின் பராமரிப்புப் பதிவுகள் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பவர் டிரான்ஸ்பர் யூனிட் (PTU) தொடர்பான குறைபாட்டுடன் விமானம் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏர்பஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் பிரான்சின் பிஇஏ (BEA) அமைப்பினர் விமானத்தை ஆய்வு செய்துள்ளனர். ஹைட்ராலிக் பாகங்கள் மற்றும் விமானத்தின் தரவுப் பதிவுக் கருவி (Flight Recorder) ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



