முக்கிய ஐடி ஆலோசனை நிறுவனம் ஒன்று சமர்ப்பித்திருந்த எச்-1பி (H-1B) விசா விண்ணப்பங்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) நிராகரித்துள்ளது. தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான தகுதிகள் மற்றும் கடமைகளுக்கு ஏற்ப ஊதியத்தை நிர்ணயிக்காமல், குறைந்த ஊதிய நிலையில் அந்தப் பணிகளை வகைப்படுத்தியதை அந்த அமைப்பு கண்டறிந்துள்ளது. இந்த முறைகேடு காரணமாகவே விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதோடு, ஏற்கனவே வழங்கப்பட்ட சில அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும், ஊதிய விதிமுறைகளை மீறும் செயல்களையும் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு சார்ந்த குடிவரவு விண்ணப்பங்களை ஆய்வு செய்தபோது, வெர்மான்ட் அலுவலகம் இந்த முரண்பாடுகளைக் கண்டறிந்தது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர், பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை அல்லது பணி விவரங்கள் குறித்த தகவல்களை அந்த அமைப்பு வெளியிடவில்லை. எச்-1பி திட்டத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவே இந்த அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக USCIS விளக்கம் அளித்துள்ளது.


