மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று (செப். 17) நடைபெற்ற நிலையில், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அமைச்சர் நிர்மல் குமாரின் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த விழாவில், காலை 7.
35 மணிக்கு கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவைக் காண விஐபிக்கள், நன்கொடையாளர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என சுமார் 9,000 பேருக்கும், ஆன்லைன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,000 பொதுமக்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, நான்கு சித்திரை வீதிகளிலும் பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
நேற்று நள்ளிரவு முதலே கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் திரண்டிருந்த பக்தர்கள், சித்திரை வீதிகளுக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். மாசி மற்றும் ஆவணி மூல வீதிகளில் இருந்து சித்திரை வீதிக்குச் செல்லும் வழிகள் அனைத்தும் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், ஆவணி மூல வீதி மற்றும் மாசி வீதிகளில் நின்றபடி பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அமைச்சர் நிர்மல் குமார் காரில் வெளியே வந்தபோது, அவரை வழிமறித்த பக்தர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அப்போது அவர்கள், “விஐபிக்கள் மட்டும் ஓட்டுப் போட்டு நீங்கள் வெற்றி பெறவில்லை. பொதுமக்களாகிய நாங்கள் ஓட்டுப் போட்டுத்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.
எங்களை ஏன் கோபுர தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை? ” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் பதில் ஏதும் அளிக்காமல் அங்கிருந்து சென்றார்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், “ஏழை, பணக்காரர் எனப் பலரும் கடன் வாங்கியாவது இந்த விழாவைக் காண வந்துள்ளனர். விஐபிக்கள் மட்டுமே வரவேண்டும் என்று முன்பே அறிவித்திருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம். விஐபிக்கள் மட்டுமே மனிதர்களா?
” என்று வேதனையுடன் தெரிவித்தனர். இதற்கிடையே, கும்பாபிஷேகத்திற்குப் பிறகு நகைக்கடை பஜார் பகுதியில் திரண்டிருந்த பக்தர்கள், சித்திரை வீதி வழியாகக் கோயிலுக்குள் செல்ல அனுமதி கோரினர். போலீஸார் அனுமதி மறுத்ததால் அங்கு நெரிசல் ஏற்பட்டது.
நிலைமையைச் சமாளிக்க அமைச்சர் நிர்மல் குமார் போலீஸ் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி நின்று, “காலை 10 மணிக்கு மேல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள், அதுவரை அமைதி காக்கவும்” என்று கேட்டுக்கொண்டார். எனினும், அமைச்சரின் பேச்சை ஏற்க மறுத்த பக்தர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


