தமிழகத்தில் டாஸ்மாக் பார்களுக்கான புதிய டெண்டர் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படும் என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இந்த புதிய டெண்டரில் பார்களுடன் இணைந்து உணவகங்களை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைக் கொண்டு உணவுகளின் தரத்தை ஆய்வு செய்து, முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
மதுபான கொள்முதல் விவகாரத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்புகளே வழங்கப்படுவதாகவும், எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இன்றி அரசு செயல்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். டாஸ்மாக் துறையை லாப நோக்கில் மட்டும் பார்க்காமல், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதே அரசின் முதன்மை இலக்கு என அவர் தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் பங்கேற்ற அமைச்சர், விதிமீறல்களில் ஈடுபடும் FL2 பார்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தில் தேவையான மறுசீரமைப்பு மாற்றங்கள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


