15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் மற்றும் விண்ணப்பக் கட்டணங்கள் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் புதிய திருத்தங்களை அறிவித்துள்ளது. இதற்கான பாஸ்போர்ட் (திருத்த) விதிகள், 2026-ஐ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் செப்டம்பர் 15 அன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட உடனேயே நடைமுறைக்கு வந்துவிட்டன.
வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் மற்றும் தலைமை பாஸ்போர்ட் அதிகாரி பி. எஸ். முபாரக் இந்த உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
புதிய விதிகளின்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் 36 பக்க சாதாரண பாஸ்போர்ட், வழங்கப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அல்லது அந்த குழந்தை 18 வயதை அடையும் வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை மட்டுமே செல்லுபடியாகும். 1980-ஆம் ஆண்டின் பாஸ்போர்ட் விதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் இந்த விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கிடையில், கடந்த ஜூலை 1 முதல் அனைத்து வகையான பாஸ்போர்ட் சேவைகளுக்கான கட்டணங்களையும் அமைச்சகம் ஏற்கனவே உயர்த்தியுள்ளது. புதிய கட்டண அமைப்பின்படி, சாதாரண பிரிவில் 36 பக்க பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.
1,500-லிருந்து ரூ. 2,500 ஆகவும், 60 பக்க பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ. 2,000-லிருந்து ரூ.
3,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் சேவையைப் பொறுத்தவரை, 36 பக்க பாஸ்போர்ட்டுக்கு ரூ. 5,000 (முன்பு ரூ.
3,500) மற்றும் 60 பக்க பாஸ்போர்ட்டுக்கு ரூ. 6,000 (முன்பு ரூ. 4,000) என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்குப் பதிலாக புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான தட்கல் கட்டணம் ரூ. 5,500-லிருந்து ரூ. 8,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மைனர்களைப் பொறுத்தவரை, சாதாரண பிரிவில் 36 பக்க பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் ரூ. 1,000-லிருந்து ரூ. 1,750 ஆகவும், தட்கல் பிரிவில் ரூ.
3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது 10 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பாஸ்போர்ட் புதுப்பித்தல் (reissue) விண்ணப்பங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.


