ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த 'பிளை துபாய்' (flydubai) விமானம், சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த அவசரகால நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
FDB1073 என்ற அந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தில் 180 பயணிகள் பயணம் செய்துள்ளனர். விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலால், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்த நிலையில், சவூதி அரேபியாவின் தபூக் விமான தளத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் இஸ்ரேலிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், விமானத்தின் முன்பகுதியில் இருந்தவர்கள் சத்தத்தைக் கேட்டதாகவும், திடீரென விமானம் தாழ்வாகச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
'நாங்கள் அலறல் சத்தத்தைக் கேட்டோம், விமானம் திடீரென கீழே இறங்கியது' என்று பயணி ஒருவர் விவரித்தார். மற்றொரு பயணி மிரியம் கூறுகையில், 'விமானத்தின் காக்பிட் கதவு திறக்கப்பட்டபோது உள்ளே ரத்தம் இருந்தது. விமானிகளில் ஒருவர் மடிக்கத்தி ஒன்றால் தாக்கப்பட்டார்.
பயணிகளும் விமானப் பணியாளர்களும் இணைந்து அந்த மோதலைக் கட்டுப்படுத்தினர். அந்த நேரத்தில் நாங்கள் உயிர் பிழைக்க மாட்டோம் என்று நினைத்தோம்' என்று தெரிவித்தார். FlightRadar24 தரவுகளின்படி, துபாயிலிருந்து புறப்பட்ட இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு, 33,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், ஒரு நிமிடத்திற்குள் 17,000 அடி உயரத்திற்கு திடீரெனக் கீழே இறங்கியது.
ஜோர்டான்-சவூதி எல்லைக்கு அருகே விமானம் திசை மாறியபோது, சர்வதேச அவசர கால குறியீடான '7700' மற்றும் விமானக் கடத்தல் அல்லது சட்டவிரோத தலையீட்டைக் குறிக்கும் '7500' ஆகிய குறியீடுகளை விமானிகள் அனுப்பியுள்ளனர். விமானிகள் மோதிக்கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் விமானத்தைக் கடத்தித் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு பெரிய பேரழிவு நூலிழையில் தவிர்க்கப்பட்டது' என்று குறிப்பிட்டார். இஸ்ரேலியப் பயணிகள் சிலரும் விமானப் பணியாளர்களுக்கு உதவியாக இருந்து தாக்குதல் நடத்தியவரை அடக்கினர். விமானம் கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேல் தனது போர் விமானங்களை தயார் நிலையில் வைத்திருந்தது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பயணிகளைத் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பிளை துபாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்கள் குழுவினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கூடுதல் விவரங்கள் உறுதி செய்யப்பட்டவுடன் தெரிவிக்கப்படும்' என்று கூறியுள்ளது. சவூதி அரேபியாவில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களைச் சுற்றி சவூதி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

