தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேடைகளில் உரத்த குரலில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ள விஜய், தாராபுரத்தில் மட்டும் கத்தாமல் நடிக்கத் தொடங்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், தவெக ஆட்சியில் அமைச்சர்களின் பெயர்கள் கூட முதல்வருக்குத் தெரியவில்லை என்றும், அவர் சட்டப்பேரவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் மௌனம் காப்பதாகவும் குறிப்பிட்டார்.
தவெகவில் இணைந்து மீண்டும் வேறு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, தாராபுரம் மக்களை ஏமாற்ற நினைப்பதாகச் சாடினார். படித்த வழக்கறிஞரான திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், பெட்டிபாமா என அழைக்கப்படுபவருக்கு வாக்களித்தால் அவர் கட்சி தாவக்கூடும் என எச்சரித்தார். திமுக கூட்டணியிலிருந்து விலகிச் சென்றவர்களைத் துரோகிகள் என விமர்சித்த அவர், அவர்களை மக்கள் மறக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவெக அரசு தவறிவிட்டதாகவும் உதயநிதி குற்றம் சாட்டினார். நூறு நாள் வேலைத் திட்டத்தில் போதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துணிவில்லாத ஓடுகாளி முதல்வராக விஜய் செயல்படுவதாகக் கடுமையாக விமர்சித்தார்.




