கல்வித் தரத்தை மேம்படுத்தக் கோரி பிரான்சில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக திங்கட்கிழமை சுமார் 500 உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் கல்வித்துறை அமைச்சர் எட்வர்ட் ஜெஃப்ரே ஞாயிற்றுக்கிழமை இது குறித்து கூறுகையில், பள்ளிகளில் போதிய பாதுகாப்பு சூழல் இல்லாததால், 400 முதல் 500 பள்ளிகளில் வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து இதுவரை 24 பள்ளிகள் தீவைக்கப்பட்டோ அல்லது சூறையாடப்பட்டோ சேதமடைந்துள்ளதாகவும், 78 ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த வாரம் பாரிஸில் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், தற்போது துலூஸ், மாண்ட்பெல்லியர், நான்டெஸ் மற்றும் மார்செய்ல் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளன.
ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகளில் இடநெருக்கடி, பள்ளிக் கட்டிடங்களின் மோசமான நிலை மற்றும் போதிய கல்வி வளங்கள் இன்மை ஆகியவற்றை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின், நாட்டின் மொத்தம் உள்ள 3,700 பள்ளிகளில் 735 பள்ளிகள் ஏதோ ஒரு வகையில் இந்தப் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், உள்துறை அமைச்சர் லாரன் நுனெஸ் கூறுகையில், வெள்ளிக்கிழமை மட்டும் 1,747 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். போராட்டக்காரர்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது மற்றும் மாற்று ஆசிரியர்களை நியமிப்பது ஆகியவை முதன்மையாக உள்ளன. வகுப்பறைகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், உள்கட்டமைப்பு வசதிகள் பழுதடைந்திருப்பதும் கல்வியின் தரத்தைப் பாதிப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பல நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும், கலகத் தடுப்புப் போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்தச் சூழலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகவும், வகுப்புகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதாகவும் அரசு உறுதியளித்துள்ளது.
மேலும், பள்ளி நேரங்களை முறைப்படுத்துவது மற்றும் பல்கலைக்கழக சேர்க்கை முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது போன்ற சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதாக பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு வாக்குறுதி அளித்துள்ளார்.


