பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரச் சரிவு மற்றும் கல்வித் துறையில் நிலவும் உள்கட்டமைப்புச் சீர்கேடு காரணமாக, மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3.6 டிரில்லியன் யூரோக்கள் பொதுக்கடன் சுமையால் அரசு நிதிச் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகள் இன்மை மாணவர்களை வெகுண்டெழச் செய்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் 85 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
பள்ளிகளில் நீண்ட நேர வகுப்புகள், சுகாதாரமற்ற கழிப்பறைகள் மற்றும் போதிய ஆசிரியர்கள் இல்லாத சூழல் மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நீடிக்கும் வகுப்பறைகளைச் சுட்டிக்காட்டி, தாங்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். போராட்டத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, வகுப்புகளை இணையவழியில் நடத்த பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு உத்தரவிட்டுள்ளார்.
வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் எச்சரித்துள்ளார். இதனிடையே, கல்வி அமைச்சகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. பிரான்ஸில் தொடங்கிய இந்தப் போராட்டத்தின் தாக்கம் அண்டை நாடான பெல்ஜியத்திற்கும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.





