துபாயிலிருந்து புறப்பட்ட 'பிளை துபாய்' (flydubai) விமானத்தில், சக விமானியால் தாக்கப்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சார், மிகுந்த ரத்தப்போக்கு மற்றும் மயக்க நிலைக்கு இடையிலும், விமானத்தின் காக்பிட் கதவைத் திறந்து 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்தத் தகவலை அந்த விமானத்தில் பயணித்த இஸ்ரேலிய பல் மருத்துவர் மூசாவ் ஷோட்டா தெரிவித்துள்ளார்.
விமானத்தின் துணை விமானி, விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில், காக்பிட் நோக்கி ஓடிய நான்கு பயணிகளில் ஷோட்டாவும் ஒருவர். தாக்குதலில் ஈடுபட்டவரை மற்றவர்களுடன் இணைந்து கட்டுப்படுத்திய பிறகு, காயமடைந்த விமானி மச்சாருக்கு ஷோட்டா முதலுதவி அளித்தார்.
இஸ்ரேலிய ஊடகமான 'Ynet'-க்கு அளித்த பேட்டியில், அந்த திகில் நிறைந்த தருணங்களை ஷோட்டா விவரித்தார். "விமானத்தில் ஏதோ தவறு நடப்பதை உணர்ந்தேன், தாமதிக்காமல் ஓடினேன்" என்று அவர் கூறினார். மச்சாரின் உடல்நிலை குறித்து அவர் கூறுகையில், "அவரது தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தன.
அவை கிட்டத்தட்ட துண்டிக்கப்படும் நிலையில் இருந்தன. நான் மட்டுமே அந்த விமானத்தில் இருந்த மருத்துவர் என்பதால், உடனடியாக ரத்தப்போக்கை நிறுத்த முயன்றேன். தரையிறங்குவதற்குச் சற்று முன்பு வரை அவர் ஓரளவு சீராக இருந்தார், பின்னர் உடல்நிலை சற்று மோசமடைந்தது" என்று தெரிவித்தார்.
மேலும், ரத்த வெள்ளத்தில் கிடந்தபோதும் மச்சார் சுயநினைவுடன் இருந்ததாக ஷோட்டா குறிப்பிட்டார். "அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். தனக்கு 39 வயது என்றும், இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார்.
தாக்குதல் நடத்தியவர் அவரை குத்தியதோடு, கெட்ட வார்த்தைகளால் திட்டியதையும் அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அவர் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். அவரை இழந்துவிடுவோமோ என்று நான் மிகவும் பயந்தேன்" என்று அவர் கூறினார்.
சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகளில், விமானத்தின் தரையில் இருவர் ரத்த காயங்களுடன் கிடப்பது பதிவாகியுள்ளது. சவூதி அரேபியாவின் தபூக் நகரில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட பிறகு, சவூதி மருத்துவக் குழுவினர் மச்சாரை மீட்டு சிகிச்சை அளித்தனர். அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தமக்குத் தகவல் கிடைத்ததாக ஷோட்டா தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகம் ஆகியவை அறிக்கை வெளியிட்டுள்ளன. கேப்டன் மச்சாரின் உடல்நிலையைத் தாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் தபூக் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட தகவல்களின்படி, மச்சாரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், சவூதி அதிகாரிகளுடன் இணைந்து அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்தியத் தூதரகம் உறுதி அளித்துள்ளது.




