துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற பிளைதுபாய் (Flydubai) விமானத்தில், துணை விமானி கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயன்றபோது, இந்திய வம்சாவளி விமானி தலையிட்டு விபத்தைத் தடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது, எஃப்இசட்1073 (FZ1073) என்ற அந்த விமானத்தில் சுமார் 180 இஸ்ரேலிய பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தின் உள்ளே விமானிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதில் துணை விமானி கேப்டனைக் கத்தியால் குத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விமானம் திடீரென 30 வினாடிகளுக்குள் சுமார் 14,000 அடி உயரம் வரை கீழே இறங்கியதை விமானப் போக்குவரத்துத் தரவுகள் காட்டுகின்றன. பின்னர், விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் அவசரகால சமிக்ஞைகளை அனுப்பியதைத் தொடர்ந்து பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இதில் பயணம் செய்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரையிறங்கிய பிறகு, இரண்டு விமானிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் இது கடத்தல் முயற்சியாகக் கருதப்பட்டாலும், இது கடத்தல் சம்பவம் அல்ல என்று இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும், இது பயங்கரவாதத் தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விமானம் திசைதிருப்பப்பட்டதையும், பாதுகாப்பாகத் தரையிறங்கியதையும் பிளைதுபாய் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் விமானக் குழுவினரின் அடையாளம் குறித்த விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

