துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தில் (Flydubai Flight 1073) நிகழ்ந்த பயங்கரவாத முயற்சியை தனது துணிச்சலால் முறியடித்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் என்பவரை கவுரவிக்கும் தீர்மானத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. கடந்த 2026 செப்டம்பர் 30 அன்று, 174 பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தில், துணை விமானி அவசர கால கோடாரியால் கேப்டன் மச்சாரைத் தாக்கி, விமானத்தைக் கைப்பற்ற முயன்றார். இதனால் விமானம் 30 வினாடிகளுக்குள் 14,000 அடிக்கும் மேல் கீழே விழுந்தது.
கடுமையான காயங்களுக்கு மத்தியிலும், தாக்குதல் நடத்தியவரைப் போராடி வீழ்த்திய கேப்டன் மச்சார், காக்பிட் கதவைத் திறந்து சக பயணிகளின் உதவியுடன் விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைப் பயங்கரவாதச் செயலாகக் கண்டித்துள்ள அமெரிக்க நாடாளுமன்றம், விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவிய குழுவினரின் கூட்டு முயற்சியைப் பாராட்டியுள்ளது. மேலும், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகள் இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதன் முடிவுகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது.



