வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘அர்னாப்’ தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது வரும் அக்டோபர் 28-ம் தேதி ஆந்திரக் கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையை நெருங்குவதையொட்டி, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 115 முதல் 125 கி. மீ வேகத்திலும், அவ்வப்போது 140 கி. மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆந்திராவின் பாபட்லா முதல் விசாகப்பட்டினம் வரையிலான கடலோரப் பகுதிகளில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் ஆந்திராவில் நேரடியாக இருந்தாலும், ஒடிசாவின் தெற்கு மற்றும் கடலோர மாவட்டங்களிலும் இதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ராயகடா, கோராபுட், மல்காங்கிரி, கஜபதி மற்றும் கஞ்சம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் கால அவசர நடவடிக்கைகளுக்காக ஒடிசா பேரிடர் விரைவுப் படையின் 60 குழுக்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 17 குழுக்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் 225 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 100 புயல் நிவாரண முகாம்களும், 1,000 தற்காலிகத் தங்குமிடங்களும் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.




