அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் உள்ள எரிசக்தித் துறைக்குச் சொந்தமான சவன்னா ரிவர் தேசிய ஆய்வகத்தில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தினால் கதிரியக்கக் கசிவு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்ததைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில், வான்வழி மற்றும் நீர்வழிப் போக்குவரத்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
சவன்னா ரிவர் தேசிய ஆய்வகத்தின் ஒரு அறையில் புதன்கிழமை மாலை 5:40 மணியளவில் இந்தத் தீ விபத்து தொடங்கியது. இந்தத் தீ விபத்தினால், வடிகட்டப்படாத தரைமட்ட கதிரியக்கக் கசிவு ஏற்பட்டதாக சவன்னா ரிவர் தளம் (SRS) தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அது முழுமையாக அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த கட்டிடத்திற்கு வெளியே கதிரியக்க பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தற்போதைய நிலவரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக, ஆய்வகத்தின் 'ஏரியா ஏ' (Area A) பகுதியில் பணியாற்றிய ஊழியர்கள் சுமார் 30 நிமிடங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவசரக்கால பணிகளில் ஈடுபடாத பிற ஊழியர்களும் முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த விபத்தினால் அப்பகுதிக்கான போக்குவரத்துகள் மட்டுமின்றி, ஆய்வக வளாகத்திற்குள் நுழையும் வழிகளும் மூடப்பட்டன. சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, இரவு 9:45 மணியளவில் அவசரநிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் விலக்கப்பட்டு, வளாகத்திற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
சுமார் 310 சதுர மைல் பரப்பளவு கொண்ட சவன்னா ரிவர் தளம், தென் கரோலினாவின் பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ளது. அணுசக்தி தொடர்பான சுற்றுச்சூழல் தூய்மைப் பணிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.


