சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான தீபாவளி விளம்பர வீடியோவில் நடித்த நடிகை தியா மிர்சாவின் வீடியோவை, மும்பை மாநகராட்சி (பிஎம்சி) நீக்கியதற்கு மும்பை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகளின் தேவையற்ற கருத்துகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறி, நீதிமன்றம் தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, அந்த வீடியோவை மீண்டும் பதிவேற்றுமாறு பிஎம்சி-க்கு அறிவுறுத்தியுள்ளது.
மும்பை நகரம் ஒற்றுமையால் இயங்குகிறது என்றும், இத்தகைய தேவையற்ற கருத்துகள் அந்த ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்க, நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் பிஎம்சி இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதில் தியா மிர்சா, மாதுரி தீட்சித், நிஷிகந்தா வாட் மற்றும் கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதில் தியா மிர்சாவின் வீடியோ மட்டும் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது. இதற்கு மும்பை பாஜக தலைவர் அமித் சதம் மற்றும் மேயர் ரிது தாவ்டே ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என்று எங்களுக்கு பாடம் தேவையில்லை என்று அமித் சதம் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
மேயர் ரிது தாவ்டே, நடிகை தியா மிர்சா இந்துத்துவாவிற்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தியா மிர்சா, பொதுநலன் கருதி நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தான் இந்த வீடியோவில் நடித்ததாகக் கூறினார். இது குறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், பொதுநலன் கருதி உயர் நீதிமன்றம் மற்றும் பிஎம்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் நடித்த வீடியோவை ஏன் எதிர்க்க வேண்டும்?
காற்று மாசுபாடு என்பது பொது சுகாதாரத்துடன் தொடர்புடையது, எனவே மாசுபாட்டைக் குறைக்கும் அனைத்து முயற்சிகளையும் வரவேற்க வேண்டும் என்று தெரிவித்தார். அரசியல் அழுத்தத்திற்குப் பணிந்து பிஎம்சி இந்த முடிவை எடுத்ததா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மற்ற பிரபலங்களின் வீடியோக்கள் இன்னும் பிஎம்சி-யின் சமூக வலைதளப் பக்கங்களில் நீக்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



