ராஜஸ்தானில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி தம்பதியினர், சொகுசு விடுதி நிறுவனத்திடம் இருந்து 40 வில்லாக்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதே நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டு ஆண்டுக்கு ரூ. 1. 8 கோடி வருமானம் ஈட்டியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாநில ஊழல் தடுப்புப் படை (ஏசிபி) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரி ஷிகார் அகர்வால், தொழில்துறை துறையின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர். இவரது மனைவி பிரசாக்கா மாத்தூர், மூத்த ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரையும் ராஜஸ்தான் அரசு தற்போது பணியிட மாற்றத்திற்கு காத்திருப்போர் பட்டியலில் (APO) வைத்துள்ளது. கோயல் ஃபேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், அனந்தா என்ற பெயரில் சொகுசு விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட்டு, அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக ஷிகார் அகர்வால் மீது முதற்கட்ட விசாரணையில் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அக்டோபர் 30 அன்று ஏசிபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதய்பூர் மாவட்ட ஆட்சியர், ராஜஸ்தான் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மற்றும் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தபோது, ஷிகார் அகர்வால் இந்த நிறுவனத்திற்குச் சலுகைகள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, விடுதி கட்டுமான விதிகளில் தளர்வு, முறையான சான்றிதழ்கள் இன்றி அனுமதி மற்றும் சிறப்பு நிதிச் சலுகைகள் வழங்கப்பட்டதாக ஏசிபி குற்றம் சாட்டுகிறது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17ஏ பிரிவின் கீழ், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், ஷிகார் அகர்வாலின் குடும்பத்தினர் அனந்தா விடுதி நிறுவனத்திடம் இருந்து 40 வில்லாக்கள் மற்றும் காட்டேஜ்களை ரூ. 6.16 கோடிக்கு வாங்கியுள்ளனர். செப்டம்பர் 2023-ல் உதய்பூரில் 20 காட்டேஜ்களும், மார்ச் 2026-ல் ஆல்வாரில் 20 வில்லாக்களும் வாங்கப்பட்டுள்ளன. சந்தை மதிப்பை விடக் குறைந்த விலையில் இவை வாங்கப்பட்டிருக்கலாம் என ஏசிபி சந்தேகிக்கிறது.
இந்த வில்லாக்கள் மீண்டும் அதே நிறுவனத்திற்கே வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதன் மூலம் உதய்பூர் சொத்துக்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 80 லட்சமும், ஆல்வார் சொத்துக்கள் மூலம் ரூ.
1 கோடி என மொத்தம் ரூ. 1. 80 கோடி வருமானம் ஈட்டத் திட்டமிடப்பட்டிருந்தது.
சொத்துக்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் அதே நாளில், அதாவது மார்ச் 27, 2026 அன்று, அந்த நிறுவனத்திற்குச் சிறப்பு நிதிச் சலுகைகள் வழங்கப்பட்டதையும் ஏசிபி சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அதிகாரிகளின் வருடாந்திர சொத்து விவர அறிக்கைகளிலும் முரண்பாடுகள் உள்ளதாகத் தெரிகிறது. ஷிகார் அகர்வால் ஜனவரி 7, 2026 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் 14 சொத்துக்களைக் குறிப்பிட்டிருந்த நிலையில், அவரது மனைவி பிரசாக்கா மாத்தூர் மறுநாள் தாக்கல் செய்த அறிக்கையில் எந்தச் சொத்தும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
தற்போது, இந்த 40 சொத்துக்களும் ஷிகார் அகர்வால், பிரசாக்கா மாத்தூர், அவர்களது இரு மகன்கள் மற்றும் மாத்தூரின் பெற்றோர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளனரா என்பது குறித்தும், அதிகார துஷ்பிரயோகம் குறித்தும் ஏசிபி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.



