டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் முறைகேடுகள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் கியான்ேஷ் குமாரின் பதவி விலகல் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த பேரணியில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, பாதுகாப்பு பணிகளுக்காக 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணி நடைபெறும் இடம் 14 பாதுகாப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் உதவி ஆணையர் அந்தஸ்திலான அதிகாரியின் மேற்பார்வையில் இருக்கும். மேலும், 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மற்றும் உடல் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மைதானத்திற்குள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. எனினும், ராம்லீலா மைதானத்தின் கொள்ளளவு 30,000 முதல் 40,000 வரை மட்டுமே இருக்கும் என்பதால், சுமார் 50,000 பேர் வரை வரக்கூடும் என்று டெல்லி காவல்துறை மதிப்பிட்டுள்ளது. கூட்ட நெரிசலை சமாளிக்க மைதானத்திற்கு வெளியே கூடுதல் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மிண்டோ சாலை-கன்னாட் பிளேஸ் சந்திப்பில் இருந்து ராம்லீலா மைதானம் வரை 'சலோ டெல்லி' என்ற பெயரில் பேரணி நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இருந்து இந்தியா கூட்டணி தலைவர்கள் திறந்தவெளி பேருந்துகளில் பேரணியின் தொடக்க இடத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேரணியில் எதிர்க்கட்சி தலைவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அபிஜீத் திப்கேவின் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பேரணியையொட்டி டெல்லியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஐடிஓ, டெல்லி கேட், ராஜ்காட், அஜ்மீரி கேட் மற்றும் துர்க்மான் கேட் உள்ளிட்ட சந்திப்புகளில் போக்குவரத்து திருப்பி விடப்படும். பகதூர் ஷா ஜாபர் மார்க், ஜவஹர்லால் நேரு மார்க், மிண்டோ சாலை மற்றும் தேஷ்பந்து குப்தா சாலைகளை தவிர்க்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்.என். ஜே. பி மற்றும் ஜி.பி. பந்த் மருத்துவமனைகளுக்கு அவசர ஊர்திகள் செல்வதை உறுதி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புது தில்லி ரயில் நிலையத்திற்கு செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மிண்டோ சாலை-கன்னாட் பிளேஸ் சந்திப்பில் இருந்து பேரணி நடத்த அனுமதி கோரி விண்ணப்பம் வரவில்லை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த பேரணிக்கு முன்னதாக, சனிக்கிழமை மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் தலைமை தேர்தல் ஆணையர் கியான்ேஷ் குமாருக்கு எதிராக அடையாள ரீதியிலான 'பொது குற்றச்சாட்டு' (public impeachment) நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேர்தல் ஆணையர் மீதான குற்றச்சாட்டுகளை பட்டியலிடும் தீர்மானத்தை கார்கே முன்மொழிந்தார். ராகுல் காந்தி நிறைவுரையாற்றினார். தேர்தல் முறைகேடுகள், வாக்காளர் நீக்கம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை சீர்குலைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் இந்த தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டு, அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.



