நீட்-பிஜி (NEET-PG) 2026 மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த (EWS) 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பொதுப்பிரிவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுயநிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த இடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இக்கல்லூரிகளில் மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் ரூ.
2. 1 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கலந்தாய்வு ஒதுக்கீட்டுப் பட்டியலின்படி, இந்த விண்ணப்பதாரர்கள் ஈடபிள்யூஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு பொதுப்பிரிவு மற்றும் சுயநிதி தகுதி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, நீட்-பிஜி தேர்வில் 79,396-வது தரவரிசை பெற்ற விண்ணப்பதாரர் ஒருவருக்கு, நவி மும்பையில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் டி. ஒய். பாட்டீல் மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவப் படிப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் சுமார் ரூ.2 கோடியாகும். அதேபோல், 71,263-வது தரவரிசை பெற்ற மற்றொரு விண்ணப்பதாரருக்கு, பெங்களூருவில் உள்ள ராஜா ராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரியில் எம். டி.ரேடியோ-டயக்னோசிஸ் படிப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கு மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் சுமார் ரூ. 1.8 கோடியாகும். விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டுக் குறிப்பிட்ட கல்லூரிகள் மற்றும் படிப்புகளின் அடிப்படையில், அவர்களின் தரவரிசைக்கேற்ப இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஒதுக்கீடு பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளலாம் அல்லது மேல்படிப்புக்காக விண்ணப்பிக்கலாம் அல்லது கலந்தாய்விலிருந்து வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



