கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) ஐச்சார் கிளை வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்புத் தொகைகளில் இருந்து சுமார் 35 கோடி ரூபாய் மாயமாகியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. தங்களின் அனுமதியின்றி பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து எந்தவிதமான குறுஞ்செய்திகளும் தங்களுக்கு வரவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வங்கியின் கிளை மேலாளர் உள்ளிட்ட பல ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்குகளைச் சரிபார்த்தபோதுதான், சேமிப்புப் பணம் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து ஹனீஃப் கான் என்ற வாடிக்கையாளர் கூறுகையில், 'எனது சேமிப்புக் கணக்கில் 39 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால் இப்போது அதில் பணம் ஏதும் இல்லை. நான் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, பணப் பரிமாற்றம் குறித்த எந்த குறுஞ்செய்தியும் எனக்கு வரவில்லை' என்று தெரிவித்தார்.
நிலம் கையகப்படுத்தப்பட்டதற்காக வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையைச் சேமித்து வைத்திருந்த பலரும் இந்த மோசடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயியான விஜேந்திர சிங், தனது கணக்கில் இருந்த 87 முதல் 88 லட்சம் ரூபாயில் தற்போது வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டார். இதேபோல், ஜேவார் விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில் கிடைத்த இழப்பீட்டுத் தொகையான 1.
29 கோடி ரூபாயில், 1. 18 கோடி ரூபாய் மாயமாகியுள்ளதாக சந்தோஷ் என்ற 60 வயது பெண்மணி தெரிவித்துள்ளார். தனது கணக்கில் 9.
5 லட்சம் ரூபாய் காணாமல் போனதாக ஜாகிர் என்ற மற்றொரு வாடிக்கையாளரும் புகார் அளித்துள்ளார். அவரும் தமக்கு எந்தவிதமான எச்சரிக்கை குறுஞ்செய்தியும் வரவில்லை என்று கூறியுள்ளார். இந்த மோசடி குறித்து பீட்டா-2 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் உறுதியளித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





