அர்னாப் புயல் ஆந்திரப் பிரதேசத்தில் கரையை கடந்த நிலையில், கனமழை மற்றும் பலத்த காற்றினால் மூவர் உயிரிழந்துள்ளனர். புயல் பாதிப்பு காரணமாக ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை 8 மணியளவில் நர்சாபூர் மற்றும் ஏனம் இடையே அர்னாப் புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, புயல் கரையைக் கடந்தபோது காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி. மீ. ஆகவும், அவ்வப்போது 150 கி.மீ. வேகத்திலும் வீசியது. ஆந்திராவில் புயல் பாதிப்பால் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் மரம் விழுந்ததில் கிஷோர் குமார் (46) என்பவர் உயிரிழந்தார்.
விசாகப்பட்டினம் மற்றும் அனகாபள்ளி மாவட்டங்களில் தலா ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 57,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பகுதிகளில் தாழ்வான இடங்களில் கடல் நீர் ஊடுருவக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'சுமார் 70,900 ஹெக்டேர் நெற்பயிர்களும், 10,450 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 180 வீடுகள் சேதமடைந்துள்ளன.
எனவே, பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும்' என்று அவர் கோரியுள்ளார். அர்னாப் புயல் தற்போது நிலப்பகுதிக்கு நகர்ந்து வலுவிழந்து வரும் நிலையில், தெலங்கானாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. கம்மம், பத்ராத்ரி கொத்தகுடெம், நல்கொண்டா மற்றும் சூர்யாபேட் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுத்துள்ளது.
ஒடிசாவில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் கஜபதி மாவட்டத்தின் மகேந்திரகரில் அதிகபட்சமாக 250 மி. மீ.
மழையும், கோராபுட் மாவட்டத்தின் பொட்டாங்கியில் 188 மி. மீ. மழையும் பதிவாகியுள்ளது.
புயலின் தாக்கம் நீடிக்கும் என்பதால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி, மேற்கு சிங்பூம், கிழக்கு சிங்பூம் மற்றும் சிம்தேகா ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



