வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் (SIR) போது, வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் மற்றும் முரண்பாடுகளைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்ட மென்பொருளின் பெயர் மற்றும் அதன் பதிப்பு குறித்த விவரங்களை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, அக்டோபர் 16-ம் தேதி தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் இந்தத் தகவல் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் வணிக ரீதியான நம்பிக்கை, வர்த்தக ரகசியங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை (IPR) தொடர்பானவை என்பதால், அவற்றை வெளியிட முடியாது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம். ஏ.
முஜீப் அய்யூப், கடந்த ஜூலை 27-ம் தேதி தாக்கல் செய்த மனுவில், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளைக் கண்டறிய தேர்தல் ஆணையம் பயன்படுத்திய மென்பொருள், செயலி, அல்காரிதம் அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) தளம் குறித்த விவரங்களைக் கேட்டிருந்தார். மேலும், இந்த மென்பொருள் தானாகவே பதிவுகளைச் சரிபார்ப்பு, திருத்தம் அல்லது நீக்கம் செய்ய பரிந்துரைக்கிறதா என்றும், அவ்வாறு இருந்தால் அதற்கான பணிப்பாய்வு (workflow) முறை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் (Machine Learning) அல்லது முன்கணிப்பு பகுப்பாய்வு போன்ற தானியங்கி முடிவெடுக்கும் அமைப்புகள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டதா என்றும் அவர் வினவியிருந்தார். இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், "சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிக்காகப் புதிய மென்பொருள் எதுவும் உருவாக்கப்படவோ அல்லது கொள்முதல் செய்யப்படவோ இல்லை.
வாக்காளர்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவது குறித்த முடிவுகளை தேர்தல் பதிவு அதிகாரிகள் (EROs) உண்மைகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்கின்றனர்" என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும், கேட்கப்பட்ட கேள்விகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(f)-ன் கீழ் வராத விளக்கங்கள் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், மென்பொருள் மற்றும் அல்காரிதம் தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பகிர்வதில்லை என்பது வழக்கமான நடைமுறை என்று தெரிவித்தார். முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) தயாரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களும், இத்தகைய கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும்போது வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலக் குறியீடுகளை (Source codes) பகிர மறுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



