ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் களத்தில், விசாகப்பட்டினத்தைச் சுற்றி அமையவுள்ள பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்கள் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன. கூகுள் மற்றும் அதானி குழுமத்துடன் இணைந்து மாநில அரசு முன்னெடுக்கும் இந்தத் திட்டங்களுக்கு, உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் திட்டங்களால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்பதே இவர்களின் முதன்மையான அச்சமாகும். விசாகப்பட்டினத்தின் தற்போதைய தினசரி குடிநீர் தேவை 480 மில்லியன் லிட்டராக உள்ள நிலையில், அங்கு 410 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், 6.5 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையங்கள் ஆண்டுக்கு சுமார் 3,000 மில்லியன் கன அடி (TMC) நீரை நுகரும் என்று அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையில் உள்ள நகரின் தேவையை மேலும் பாதிக்கும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஈ. ஏ.எஸ். சர்மா எச்சரித்துள்ளார். குறிப்பாக, முடசலோவா நீர்த்தேக்கத்திற்கு அருகில் தரவு மையப் பூங்கா அமைப்பது உள்ளூர் நீர் ஆதாரங்களை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது குறித்து சுதந்திரமான நீர் தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளும் இந்தத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தர்லுவாடா மற்றும் அடவிவரம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விதம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட வேகம் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படாதது குறித்து அவை கேள்வி எழுப்பியுள்ளன.
'தரவுகளை நாங்கள் குடிக்க முடியாது' என்ற முழக்கங்களுடன் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கிரீன் விசாகா போன்ற அமைப்புகள், உள்ளாட்சித் தேர்தலில் குடிநீர், மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து வேட்பாளர்களிடம் கேள்வி எழுப்புமாறு வாக்காளர்களை வலியுறுத்தி வருகின்றன. இந்த அச்சங்களை அரசு மறுத்துள்ளது.
இது தவறான தகவல் என்று கூறியுள்ள தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ், தரவு மையங்களுக்குத் தேவையான நீர் போலவரம் திட்டத்திலிருந்து பிரத்யேக குழாய்கள் மூலம், தொழில்துறை ஒதுக்கீட்டில் இருந்து மட்டுமே வழங்கப்படும் என்றும், நகரின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார். கூகுள் மற்றும் அதானி கானெக்ஸ் நிறுவனங்கள், நீர் நுகர்வைக் குறைக்க காற்று குளிரூட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளன.
இருப்பினும், போலவரம் திட்டத்தின் தாமதம் மற்றும் நீர் பயன்பாட்டு மதிப்பீடுகளில் உள்ள தெளிவின்மை காரணமாக மக்கள் மத்தியில் சந்தேகம் நீடிக்கிறது. ஆந்திர அரசு 6. 5 ஜிகாவாட் தரவு மையத் திறனை இலக்காகக் கொண்டுள்ளது.
இதில் கூகுள் மற்றும் அதானி கானெக்ஸ் இணைந்து விசாகப்பட்டினத்தில் 1 ஜிகாவாட் திறன் கொண்ட மையத்தை அமைக்கின்றன. இதற்காக சுமார் ரூ. 1.
25 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தவிர, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விஜயநகரம் மாவட்டத்தில் ரூ. 1 லட்சம் கோடி முதல் ரூ.
1. 08 லட்சம் கோடி மதிப்பீட்டில் 1-1. 5 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையத்தை அமைக்க உள்ளது.
மேலும், சிஃபி, அனந்த் ராஜ் கிளவுட், ரினியூ உள்ளிட்ட நிறுவனங்களும் பல்வேறு முதலீடுகளில் தரவு மையங்களை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளன. வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் நாரா லோகேஷ் கூறுகையில், கூகுள் திட்டத்தின் மூலம் மட்டும் 1. 88 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தார்.
ஆனால், துறை சார்ந்த வல்லுநர்கள் நேரடி வேலைவாய்ப்புகள் 5,000 முதல் 6,000 வரை மட்டுமே இருக்கும் என்றும், மொத்த வேலைவாய்ப்புகள் 20,000 முதல் 30,000 வரை மட்டுமே இருக்கும் என்றும் மதிப்பிடுகின்றனர். தரவு மையங்களின் விரிவாக்கம் இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாகப்பட்டினத்தின் இந்த விவகாரம் தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றுள்ளது.



