உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்திற்கு ராகுல் காந்தி சென்று கொண்டிருந்தபோது, அவரது பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் விபத்து ஏற்பட்டது. லக்னோவில் இருந்து சுல்தான்பூர் நோக்கிச் சென்றபோது, ஆம்புலன்ஸ் ஒன்று பின்னால் வந்த வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் மொத்தம் நான்கு கார்களும் ஒரு ஆம்புலன்ஸும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ராகுல் காந்தியுடன் சென்ற காங்கிரஸ் கட்சியினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் காயமடைந்தனர். எனினும், ராகுல் காந்தி எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது ராகுல் காந்தியின் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்தது.
சுல்தான்பூர் மாவட்டத்தின் ஹாலியாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. விபத்து ஏற்பட்ட போதிலும், ராகுல் காந்தி தனது பயணத்தைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்குச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக அவர் சென்றுகொண்டிருந்தார்.



