பெங்களூருவில் உள்ள கான்ராட் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை மாலை நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்ததில் வெளிநாட்டவர் இருவர் உயிரிழந்தனர். ஜெர்மனியைச் சேர்ந்த லுஃப்தான்சா விமான நிறுவன ஊழியர் அலெக்சாண்டர் மாக்சிமிலியன் தீஸ் (57) மற்றும் ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த ஐபிஎம் திட்ட மேலாளர் ஜுராஜ் ஹோர்வட் (45) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டிசாண்டிஸ் (41) மற்றும் நீச்சல் குளப் பணியாளர் ராகுல் திவாரி (28) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என உயிரிழந்த ஜெர்மன் நாட்டுப் பயணியின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஹோட்டல் நிர்வாகம் மீது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஹோட்டல் நிர்வாகம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியுள்ளது. மேலும், பராமரிப்புப் பணிகளுக்காக நவம்பர் 30-ம் தேதி வரை நீச்சல் குளம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




