ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சம்ஸ்கிருதி மாடல் பள்ளியில், ஆறு வயது மழலையர் பள்ளி மாணவி ஒருவர், மூன்றாம் வகுப்பு படிக்கும் எட்டு வயது மாணவனால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அக்டோபர் 28 அன்று நிகழ்ந்துள்ளது. அந்த மாணவன், பாதிக்கப்பட்ட சிறுமியை இழுத்துச் சென்று, மேஜையில் தலையை மோதியதுடன், கற்கள் மற்றும் பூந்தொட்டியால் தாக்கியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, அந்த மாணவனே சிறுமியின் இருப்பிடத்தை அவளது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் சிறுமியை மயக்கமடைந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் மீட்டனர்.
முதலில் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பின்னர் மேல் சிகிச்சைக்காக சண்டிகர் பிஜிஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். ஆசிரியர்களிடம் புகார் அளிப்பதாக சிறுமி கூறியதால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சிறுமியின் உறவினர் தெரிவித்துள்ளார். அந்த மாணவன் ஏற்கனவே விலங்குகளைத் துன்புறுத்துவது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் அலட்சியமாகச் செயல்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள ஹரியானா கல்வி அமைச்சர் மஹிபால் தண்டா, இது குறித்து விசாரிக்க குழு ஒன்றையும் அமைத்துள்ளார்.




