புது தில்லியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள இந்தியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணிக்கு முன்னதாக, பொதுமக்கள் தன்னுடனும், கூட்டணி தலைவர்களுடனும் இணைந்து நடைபயணம் மேற்கொள்ளுமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'நாளை சந்திப்போம், இணைந்து நடப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பின்படி, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கன்னாட் பிளேஸ் அருகே உள்ள மின்டோ சாலை சந்திப்பில் தொடங்கி, அஜ்மீரி கேட் வழியாக ராம்லீலா மைதானத்தை இந்த நடைபயணம் சென்றடையும். இதற்கிடையில், கன்னாட் பிளேஸில் இருந்து பேரணி நடத்துவதற்கு எந்தவித அனுமதியும் கோரப்படவில்லை என்று தில்லி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் செல்லத் தடையில்லை என்றும், இருப்பினும் தில்லி முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) 163-வது பிரிவின் கீழ் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள பேரணிக்காக மத்திய மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காவல் துறையினரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கிடையில், தலைமைத் தேர்தல் ஆணையர் கியான்ேஷ் குமார் மீதான பதவி நீக்கத் தீர்மானம் தொடர்பான இந்தியா கூட்டணியின் பொது நிகழ்ச்சி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக, மழை காரணமாக இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், 'மூத்த தலைவர்கள் மழையில் அமர்வது சிரமமாக இருக்கும் என்பதால், ஒருமித்த கருத்துடன் இந்த நிகழ்ச்சி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்திய ஜனநாயகத்தை சிதைப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வரும் மக்களைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


