ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், ராப்தாடுவில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக 20 மனநல ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பத்தாம் வகுப்பு 'ஏ' பிரிவு மாணவர்கள் மற்றும் 8, 9, 10-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் மற்றும் மனநல ஆதரவை வழங்கி வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பான கற்றல் சூழலை உறுதி செய்ய அரசு உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், மாணவி ஒருவரை ரம்பத்தால் தாக்கியதில், அவரைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவரும் காயமடைந்தார். படுகாயமடைந்த மாணவி பெங்களூரு மணிப்பால் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமுடன் உள்ளார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தர்மாவரம் ரயில் நிலையத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். குற்றவாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளிப் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் நாரா லோகேஷ் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு முழு ஆதரவை வழங்கும் என்றும் அவர் கூறினார்.



