இந்திய மலையேற்ற வீராங்கனை கவிதா சந்த், ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோவை 24 மணி நேரத்திற்குள் ஏறி இறங்கி புதிய சாதனை படைத்துள்ளார். மவேகா கேட் பகுதியிலிருந்து புறப்பட்டு, உஹுரு சிகரத்தை அடைந்து மீண்டும் மவேகா கேட் பகுதியை வந்தடைய அவருக்கு மொத்தம் 22 மணி நேரம் 36 நிமிடங்கள் ஆனது. இதில் சிகரத்தை அடைய மட்டும் 12 மணி நேரம் 46 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். பொதுவாக மலையேறுபவர்கள் இந்த இலக்கை அடைய ஐந்து முதல் ஒன்பது நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும் நிலையில், கவிதா சந்த் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 5,895 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தை அடைய அவருக்கு உள்ளூர் வழிகாட்டிகள் மற்றும் பூட்ஸ் அண்ட் கிராம்டன்ஸ் (Boots & Crampons) குழுவினர் பாதுகாப்பு மற்றும் தளவாட உதவிகளை வழங்கினர்.
சிகாகோ மாரத்தான் போட்டிக்கான கடுமையான பயிற்சி மற்றும் நேபாளத்தில் உள்ள ஹிம்லுங் ஹிமால் மலையேற்றத்தின் போது மேற்கொண்ட உயர் அழுத்தப் பயிற்சி ஆகியவை இந்த வெற்றிக்கு உதவியதாக அவர் தெரிவித்தார். தனது இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆதரவுக் குழுவினருக்கு கவிதா சந்த் நன்றி தெரிவித்துள்ளார். ஏழு கண்டங்களின் மிக உயர்ந்த சிகரங்களை ஏறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கவிதா சந்த், இதுவரை எல்பிரஸ், டெனாலி, வின்சன் மற்றும் அக்கோன்காகுவா ஆகிய சிகரங்களை ஏறியுள்ளார். கிளிமஞ்சாரோ அவரது ஐந்தாவது சிகரமாகும். சர்வதேச மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பதையும், மலையேற்ற இலக்குகளையும் அவர் சமநிலையில் கையாண்டு வருகிறார்.



