கென்யாவின் ஷகோலா வனப்பகுதியில் 191 பேரை கொன்ற வழக்கில், குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்சின் நிறுவனர் பால் மெக்கன்சிக்கு மொம்பசா உயர் நீதிமன்றம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உலக முடிவு நெருங்கிவிட்டதாகவும், சொர்க்கத்தை அடைய பட்டினி கிடப்பது அவசியம் என்றும் கூறி, தனது ஆதரவாளர்களை கட்டாயப்படுத்தி பட்டினி போட்டதாலும், சித்திரவதை செய்ததாலும் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தன. உயிரிழந்தவர்களில் 190 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 183 பேர் பட்டினியாலும், மற்றவர்கள் மூச்சுத்திணறல், கழுத்து நெரிப்பு மற்றும் பலத்த காயங்களாலும் உயிரிழந்ததாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. ஆதரவாளர்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
மரண தண்டனை விதிப்பது, இயேசுவை சந்திக்க மரணம் உதவும் என்ற குற்றவாளிகளின் தவறான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்றும், காணாமல் போனவர்களின் உடல்களைத் தேடும் பணிகளைப் பாதிக்கும் என்றும் கருதிய நீதிபதி டயானா கவெட்சா, அவருக்கு மரண தண்டனை விதிக்க மறுத்துவிட்டார். கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் வனப்பகுதியில் உடல்களைத் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது, இதுவரை 400-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் 191 கொலைகளுக்காக மெக்கன்சி தண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மற்றும் அவருடன் தொடர்புடைய இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தத் தீர்ப்பு ஓரளவு நீதியை வழங்கினாலும், இழந்த உயிர்களுக்கு ஈடாகாது என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


