இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நோக்கில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை (ED) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. சுமார் 1 மில்லியன் டாலர் மதிப்பிலான சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றம் தொடர்பாக இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் மீது இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த 'டாக்டர் மத்தியாஸ் கார்ல் வோக் ட்ரஸ்ட்' (Dr Matthias Karl Vogt Trust) என்ற அமைப்பே இந்த 1 மில்லியன் டாலர் நிதிக்கு உண்மையான ஆதாரம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் சட்ட விதிமுறைகளைத் தவிர்ப்பதற்காக, இந்த நிதியை முதலில் லிதுவேனியாவில் உள்ள 'எக்ஸ்பேஸ் டிஜிட்டல் யுஏபி' (XBase Digital UAB) என்ற நிறுவனத்திற்கு அந்த ட்ரஸ்ட் மாற்றியுள்ளது.
அங்கிருந்து பல்வேறு நாடுகள் வழியாக இந்த நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனி, துபாய், லிதுவேனியா, கனடா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் மற்றும் இங்கிலாந்து எனப் பல நாடுகளின் வழியாக இந்த நிதி சிக்கலான முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட 'டிசிசி டிஜிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட்' (TCC Digital Markets Ltd) என்ற நிறுவனம், இந்த நிதியை இந்தியாவில் உள்ள தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கியதாக அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
இந்த நிதி பரிமாற்றங்கள் டிஜிட்டல் கரன்சி மூலம் மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர் மத்தியாஸ் வோக் எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இந்த டிஜிட்டல் சொத்துக்கள் துபாய் மற்றும் லிதுவேனியா வழியாக 'ஹவாலா' முறையில் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் 'ஏர்வாலெக்ஸ்' (Airwallex) கணக்கிற்கு, கடந்த 2026-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த 1 மில்லியன் டாலர் நிதி வந்து சேர்ந்துள்ளது.
இது 'மானியமாக' காட்டப்பட்டு, இரண்டு தவணைகளாக (67,006 மற்றும் 71,746 பிரிட்டிஷ் பவுண்டுகள்) பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, கனடாவில் பதிவு செய்யப்பட்ட 'இஸட்பேஸ் டிஜிட்டல் இன்க்' (ZBase Digital Inc) என்ற நிறுவனம், அதே இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கிற்கு பிப்ரவரி மாதம் 5,00,000 டாலர்களை மாற்றியுள்ளதையும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
இந்த இரண்டு பரிமாற்றங்களின் மொத்த மதிப்பு 1. 5 மில்லியன் டாலராகும். இது தொடர்பாக ஏர்வாலெக்ஸ் நிறுவனத்திடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


