அரசியல் விவாதங்களை வீதிகளில் முன்னெடுப்பதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்திற்குள் வந்து தன்னுடன் விவாதிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் விடுத்துள்ளார். ஹரியானாவின் கர்னாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்களைத் தவிர்ப்பதாகவும், அரசின் பதில்களை எதிர்கொள்ளும் திராணி அவரிடம் இல்லை என்றும் விமர்சித்தார். அரசியல் ஆதாயத்திற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முடக்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மக்களைத் திரட்டிப் போராடினால், சட்டப்பேரவைகள் மற்றும் பொது இடங்கள் என அனைத்துக் களங்களிலும் பாரதிய ஜனதா கட்சி பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக அமித் ஷா எச்சரித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளிப்படையான விவாதத்திற்குத் தயார் என ராகுல் காந்தி விடுத்திருந்த அழைப்பைத் தொடர்ந்தே இந்தச் சவால் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அமித் ஷாவின் கருத்தை ஆதரித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவாதங்களுக்கு நாடாளுமன்றமே சரியான இடம் என்றும், அரசிடம் கேள்வி எழுப்புபவர்கள் அரசின் பதிலையும் கேட்கும் கடமைப்பாடு கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.


