இந்தியாவில் நடப்பு ரபி பருவத்தில் பயிர் சாகுபடி பரப்பு 46 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி நிலவரப்படி 69.02 லட்சம் ஹெக்டேராக இருந்த சாகுபடி பரப்பு, இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 37.56 லட்சம் ஹெக்டேராக சரிந்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடுகு மற்றும் பருப்பு வகைகளின் சாகுபடி கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், கோதுமை விதைப்பு பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. போதிய ஈரப்பதம் இல்லாமை மற்றும் பகல் நேரங்களில் நிலவும் அதிக வெப்பமே இந்த தாமதத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெப்பநிலை குறையும்போது சாகுபடி பணிகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மூத்த அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ரபி பருவ விதைப்பு மற்றும் காரீஃப் அறுவடைப் பணிகளை ஆய்வு செய்தார். வறட்சி மற்றும் சீரற்ற மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து உதவ வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மேலும், காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய விதைகள் மற்றும் குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை ஊக்குவிக்குமாறும் அவர் வலியுறுத்தினார். நடப்பு ரபி பருவத்தில் 177.72 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியை இலக்காக அரசு நிர்ணயித்துள்ளது.
சாகுபடி பணிகள் மந்தமாகத் தொடங்கினாலும், முக்கிய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கூடுதல் விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதாக அரசு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு கோதுமை சாகுபடி 336 லட்சம் ஹெக்டேராக உயர்ந்து, 120.66 மில்லியன் டன் உற்பத்தி எட்டப்பட்டது. காரீஃப் அறுவடை முடிந்தவுடன், மண்ணில் உள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்தி ரபி பருவ விதைப்புப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



