பெட்ரோலில் 20 சதவீதத்திற்கு மேல் எத்தனால் கலக்கப்படுவதாகக் கூறி, இதனால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கர்நாடக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. பெட்ரோல் விற்பனை நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான எத்தனால் கலப்பதாக கர்நாடக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பெங்களூரு நகர்ப்புறம் உள்ளிட்ட மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் இருந்து ஐஓசிஎல் (IOCL), எச்பிசிஎல் (HPCL), பிபிசிஎல் (BPCL), நயாரா மற்றும் ஷெல் போன்ற முன்னணி எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து 63 பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
முதலில் இந்த மாதிரிகள் அந்தந்த நிறுவனங்களின் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு விளக்கம் கோரப்பட்டது. ஆனால், நிறுவனங்கள் தெளிவான பதிலளிக்கத் தவறியதால், கர்நாடக அரசு இந்த மாதிரிகளை பெங்களூருவில் உள்ள ஸ்ரீராம் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (Shriram Research Institute) அனுப்பி சுயாதீன சோதனைக்கு உட்படுத்தியது. இந்த நிறுவனம் தேசிய அங்கீகார வாரியத்தின் (NABL) சான்றிதழ் மற்றும் ஐஎஸ்ஓ (ISO) அங்கீகாரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனையின் முடிவில், பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஐஓசிஎல் பெட்ரோலில் 31. 2 சதவீதமும், எச்பிசிஎல்-ல் 30.5 சதவீதமும், பிபிசிஎல்-ல் 26. 5 சதவீதமும், நயாரா நிறுவனத்தில் 26. 1 சதவீதமும், ஷெல் நிறுவனத்தில் 25.5 சதவீதமும் எத்தனால் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது இ20 (E20) எரிபொருள் அல்ல' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 20 சதவீதத்திற்கு மேல் எத்தனால் கலக்கப்படுவதால், வாகனங்களின் மைலேஜ் குறைவதோடு, பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும் என்று அரசு கவலை தெரிவித்துள்ளது.
இந்த அதிகப்படியான எத்தனால் கலப்பால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு ஒரு இழப்பீட்டு நிதியை உருவாக்க வேண்டும் என கர்நாடக உணவு, சிவில் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் கோரிக்கை விடுத்துள்ளார். மைலேஜ் 10 சதவீதம் குறைந்தால் வாகன ஓட்டிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 62,000 கோடி இழப்பும், வாகன பராமரிப்புச் செலவுகளுக்காக கூடுதலாக ரூ.
39,000 கோடி சுமையையும் நுகர்வோர் சுமக்க நேரிடும் என்று கர்நாடக அரசு மதிப்பிட்டுள்ளது. நுகர்வோருக்கு வழங்கப்படும் பெட்ரோலில் எவ்வளவு எத்தனால் கலக்கப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசு பொதுவெளியில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.




