பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான எத்தனால் கலக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவின் ஏழு மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகளை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில், இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, 'E20 என்பது 420 ஆக மாறிவிட்டது.
பொதுமக்களின் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுகிறது' என்று கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகாவின் பெங்களூரு, கோலார், சிக்கபள்ளாப்பூர், பெங்களூரு ஊரகம், ராமநகரம், மங்களூரு மற்றும் துமகூரு ஆகிய மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 14 மாதிரிகளில், 11 மாதிரிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான எத்தனால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகியவற்றின் மாதிரிகளில் முறையே 31. 2 சதவீதம் மற்றும் 30. 5 சதவீதம் எத்தனால் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரத் பெட்ரோலியம் (BPCL), நயாரா எனர்ஜி மற்றும் ஷெல் ஆகிய நிறுவனங்களின் எரிபொருள் மாதிரிகளும் இந்த பரிசோதனையில் உட்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த நிறுவனங்களின் உள்நாட்டு ஆய்வகங்கள் எத்தனால் அளவை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, 'நாட்டின் எரிபொருள் தொட்டிகளில் என்ன நிரப்பப்படுகிறது?
பெட்ரோலில் உண்மையில் எவ்வளவு எத்தனால் உள்ளது? 20 சதவீதத்திற்கு மேல் கலக்கும் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? ' என்று கேட்டுள்ளார்.
இதற்கிடையில், கர்நாடக அரசின் இந்த குற்றச்சாட்டுகளை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான IOCL, BPCL மற்றும் HPCL ஆகியவை கூட்டாக மறுத்துள்ளன. தாங்கள் விநியோகிக்கும் E20 பெட்ரோல், இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) விதிமுறைகளுக்கு உட்பட்டே இருப்பதாக அவை விளக்கம் அளித்துள்ளன. கர்நாடக அரசு மேற்கொண்ட மாதிரி சேகரிப்பு நடைமுறைகளில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், தகுந்த ஆவணங்கள் மற்றும் மாதிரிகள் வழங்கப்படவில்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், எரிபொருள் இழப்பு மற்றும் வாகன பழுதுபார்ப்பு செலவுகள் குறித்த கர்நாடக அரசின் மதிப்பீடுகளுக்கு எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை என்று அவை கூறியுள்ளன. முன்னதாக, கர்நாடக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத், பெங்களூருவில் உள்ள ஸ்ரீராம் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் எத்தனால் அளவு அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



